News

Friday, 10 February 2023 10:17 AM , by: Yuvanesh Sathappan

Internet in all villages of Tamil Nadu within 6 months - Minister Mano Thangaraj

இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் தெரிவித்ததாவது, சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் தெரிவித்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர் . எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெகுவிரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை என்ற அவர், நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம்  தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்ற ஆண்டு இன்டர்நெட் சேவை வழங்குதளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்

தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணைய இணைப்பு வழங்குவதற்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) மூலம் 1,627.8 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

முத்தலக்குறிச்சி கிராமப் பணிகளின் தொடக்கத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் (கன்னியாகுமரி மாவட்டம்) முத்தலக்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த திட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 ஜிபிபிஎஸ் அலைவரிசை இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-கல்வி, டெலி-மருந்து, மற்றும் டிரிபிள் ப்ளே சேவை (தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணைய இணைப்பு) போன்ற தரமான டிஜிட்டல் சேவைகளை மலிவு விலையில் மக்கள் அனுபவிக்க இத்திட்டம் உதவும். இது அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிவேக இணையச் சேவைகளை விரிவுபடுத்துவதுடன், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், பொருளாதாரத்தையும்  உயர்த்தும்.

இந்த திட்டம், மாநிலத்தின் கிராமப்புறங்களுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான டிஜிட்டல் பிளவைக் குறைக்கும்.

தமிழ்நாட்டில் இன்னும் 572 கிராமங்களில் 4ஜி சேவையே கிடைக்கவில்லை என்று மத்தியஅரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அமைச்சர் 6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் சேவை வழங்குவோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க

ஆசியாவின் பணக்கார பெண் யார்னு தெரியுமா ??? 1.42 லட்சம் கோடி சொத்தா!

குழந்தை பெற்றுக்கொண்ட மாற்றுப்பாலின தம்பதிகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)