விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்களுக்கு ரத்த சோகையை போக்கும் வகையில் இரும்பு பெண்மணி திட்டம் துவக்கப்பட்டு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கும் ஜூன் மாதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரத்த சோகை உள்ள பெண்கள் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்தக்கசிவு உள்ளிட்ட மருத்துவ சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில், அப்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத் ரெட்டி, இரத்த சோகை கண்டறியப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் இரும்பு பெண்மணி திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தில் மாதந்தோறும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட கிட் விநியோகத்திற்குப் பிறகு, பல தாய்மார்கள் தங்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்ததாகக் கூறினர்.
தற்போதைய மாவட்ட ஆட்சியர் வே.ப.ஜெயசீலன் இத்திட்டத்தை இளம் பெண்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் மாவட்ட நிர்வாகம் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வருகிற ஜூன் மாதம் முதல் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பயிற்சி குழு மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கில்பர்ட் தங்கராஜ் கூறுகையில், 467 பள்ளிகளைச் சேர்ந்த 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 43,755 சிறுமிகளின் ஹீமோகுளோபின் பரிசோதனை பிப்ரவரியில் தொடங்கி இரண்டு வாரங்களில் முடிக்கப்பட்டது. "ராஷ்டிரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் டாக்டர்கள் குழு, கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் நடுத்தர அளவிலான சுகாதார வழங்குநர்கள் போன்ற பிற குழுக்களுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது," என்று அவர் கூறினார்.
அனைத்து வகையாக பரிசோதனைகளுக்கு பிறகு சுமார் 40% சிறுமிகளுக்கு இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 11,476 சிறுமிகளுக்கு லேசான இரத்த சோகை, 6,019 மாணவிகளுக்கு மிதமான இரத்த சோகை மற்றும் 1,182 சிறுமிகளுக்கு கடுமையான இரத்த சோகை இருந்தது தெரிய வந்தது.
மிதமான மற்றும் கடுமையான இரத்த சோகை கொண்ட சிறுமிகள் முறையான மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையத்திற்கு (DEIC- District Early Intervention Center) அனுப்பப்பட்டனர். "இரத்த சோகைக்கு 75% காரணம் இரும்புச்சத்து குறைபாடு என்பதால், இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த சிரப், வைட்டமின் சி மாத்திரைகள் மற்றும் ஆரோக்கியமான ஊட்டசத்து நிறைந்த உணவுப்பொருள் ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்" என்று தங்கராஜ் கூறினார்.
அடுத்த மூன்று மாதங்களில் உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் (PHC) சிறுமிகளின் பெற்றோர் முன்னிலையில் இந்த ஊட்டசத்து உணவு தொகுப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் ஒரு கிட் வழங்கப்படும். பெண் குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic courtesy: TNIE
மேலும் காண்க:
DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்