2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ, டெபாசிட் செய்யவோ அடையாள அட்டை நகல் சமர்பிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எழும்பிய குழப்பத்திற்கு எஸ்பிஐ வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த இரண்டு நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதுத்தொடர்பாக பீதி மற்றும் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் சில தென்பட்டன. அவற்றில் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்தவை 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை மாற்றுவதற்கு வங்கிகளில் அடையாளச் சான்றுடன் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்பது தான்.
அதுத்தொடர்பான ஒரு விண்ணப்பத்தின் புகைப்படமும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். பலர் அந்த விண்ணப்ப புகைப்படத்துடன் அரசின் நடவடிக்கையினை கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
ஆரம்பத்தில் இதற்கு அரசு மற்றும் RBI தரப்பில் எவ்வித விளக்கமும் வழங்கப்படாத நிலையில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி (SBI) விளக்கம் அளித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கோ அல்லது டெபாசிட் செய்வதற்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கோரிக்கை சீட்டினை நிரப்பவோ அல்லது அடையாள அட்டை நகலோ பெறப்படாது என தெளிவுப்படுத்தியுள்ளது.
முன்னதாக 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இரண்டு வகையான வழிகளை வழங்கியது.
ஒன்று, தங்களிடம் உள்ள பணத்தினை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதற்கு எவ்வித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இரண்டாவதாக, ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 20,000 வரை (அதாவது 2000 நோட்டுகள் 10) அவற்றினை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 23 முதல் வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட உள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அல்லது டெபாசிட் செய்ய செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து வரும் தகவல்களின் உண்மைத் தன்மையினை உறுதி செய்த பின்னர் சமூக வலைத்தளங்களில் பகிரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500,1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாயினை புழக்கத்திலிருந்து அகற்றுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது மீண்டும் பொதுமக்களிடையே அதிருப்தியினை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pic courtesy:social media
மேலும் காண்க: