விவசாயத்துறையில் மேற்கொள்ளப்படும் இந்திய கண்டுபிடிப்புகள், கென்யா நாட்டிலுள்ள விவசாய நிலப்பரப்பை மாற்றும் என கென்யா குடியரசின் விவசாய அமைச்சகத்தின் இயக்குனர் ஐசக் மரியேரா இன்று டெல்லியில் தான் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறை சார்ந்து கடந்த 27 வருடங்களாக இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரனின் டெல்லி தலைமையகத்தில் உள்ள கேஜே சேப்பாலுக்கு சிறப்பு விருந்தினராக கென்யா குடியரசின் விவசாய அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர், ஐசக் மைன்யே மரியேரா (Isaac Mainye Mariera) பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்தியா- கென்யா இடையேயான விவசாய உறவு:
கிரிஷி ஜாக்ரானின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி.டொமினிக், ஐசக் மைன்யே மரியேராவை வரவேற்று பேசினார். அவர் தனது உரையில், “இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே விவசாய இடைவெளிகளைக் குறைப்பதில் மரியேராவின் செயல்பாடுகள் அளப்பரியது எனப்பாரட்டினார். 2024 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள, மில்லினியர் விவசாயிகள் விருது நிகழ்வில் கென்யாவின் பங்களிப்பை மரியேரா வழங்குவார்” எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஐசக் மைன்யே மரியேரா, வேளாண் அறிவியலில் மரபியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நைரோபியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவுரையாளராகப் பணிபுரிந்த நிலையில், கடந்த 15 வருட காலமாக கென்யா நாட்டு வேளாண் துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசக் மைன்யே மரியேரா சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- “ ஹைதராபாத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தென்னிந்தியாவின் சில இடங்களுக்கு நான் பயணித்துள்ளேன். இந்தியாவிற்கு நான் வருகைத் தருவதன் முக்கிய நோக்கமே, இங்கு கடைப்பிடிக்கப்படும் வேளாண் நடைமுறைகளை தெரிந்துக் கொள்வதோடு, அதை எங்கள் நாட்டில் அமல்படுத்த முயல்வதும் தான்.”
”விவசாயத்துறையில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள், கென்யா நாட்டிலுள்ள விவசாய நிலப்பரப்பை மாற்றும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. விவசாய நடவடிக்கைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சார்ந்து தான் கென்யா இருக்கிறது. நிலையான உணவு பாதுகாப்பை அடைவதையும், கென்யா நாட்டு விளைப்பொருட்களை ஏற்றுமதி சந்தைக்கு அதிகப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்”
”கிரிஷி ஜாக்ரன் எனக்கு வழங்கிய விருந்தோம்பலை எண்ணுகையில், எனது சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வினை வழங்குகிறது” எனவும் குறிப்பிட்டார். மேலும், கென்ய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் விவசாய குழு நடவடிக்கைகளின் செயல்திறனையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
மில்லினியர் விவசாயிகள் தொடர்பான கிரிஷி ஜாக்ரானின் முன்னெடுப்பை வெகுவாக பாராட்டிய, ஐசக் மைன்யே மரியேரா- விவசாயத்துறையில் விவசாயிகள் ஈடுபட இது ஒரு உந்துசக்தியாக இருக்கும் எனவும் மனதார பாராட்டினார்.
Read more:
தலைநகருக்கு தொடர் எச்சரிக்கை- கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களின் விவரம்!
பயத்தை காட்டும் மக்காச்சோளம்- இறக்குமதி வரி குறித்து AIPBA அரசுக்கு கடிதம்