இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 2) காலை 11:50 மணிக்கு சூரியனை ஆய்வு செய்வதற்கான தனது முதல் விண்வெளி பயணமாக ஆதித்யா எல்-1 ஐ விண்ணில் செலுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு தான் நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை மென்மையாக தரையிறக்கிய முதல் நாடு என பெயர் பெற்றது இந்தியா. அதனைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது இஸ்ரோ.
ஆதித்யா எல்-1 மிஷன் எப்படி விண்வெளியை அடையும்? அது விண்வெளியில் எங்கு நிலை நிறுத்தப்படும்? அதன் நோக்கங்கள் என்ன? அது என்ன சுமைகளை சுமந்து செல்கிறது? மேலும், இஸ்ரோ ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும்? போன்ற இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 மிஷன் குறித்த விவரங்கள் பின்வருமாறு-
ஆதித்யா எல்-1 எப்படி விண்வெளிக்கு செல்லும்?
'XL' அமைப்பில் உள்ள துருவ செயற்கைக்கோள் (பிஎஸ்எல்வி) மூலம் சூரிய ஆய்வு விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. PSLV என்பது இஸ்ரோவின் மிகவும் நம்பகமான ராக்கெட் ஏவுகணைகளில் ஒன்றாகும். 2008 இல் சந்திரயான்-1 மற்றும் 2013-ல் மங்கள்யான் போன்ற முந்தைய பயணங்களும் PSLV- ஏவுகணையினை பயன்படுத்தி ஏவப்பட்டன. ராக்கெட் 6 நீட்டிக்கப்பட்ட ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்களுடன் பொருத்தப்பட்டிருப்பதால், 'XL' கட்டமைப்பில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. கனமான பேலோடுகளை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆதித்யா எல்1-ஐ சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி57- ஐ விண்ணில் செலுத்துவதற்கான 23.10 மணி நேர கவுண்டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆதித்யா எல்1 விண்கலம் 16 நாட்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.
அதன்பின் நான்கு மாத பயணத்திற்குப் பிறகு, செயற்கைக்கோள் சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டப் பாதையில் L1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா எல்-1: நோக்கம் என்ன?
இது பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. இந்த விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கு சூரிய செயல்பாடுகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை சுமந்து செல்லும். சூரியனைப் பற்றிய நமது அறிவை விரிவுபடுத்துவதும், அதன் கதிர்வீச்சு, வெப்பம், துகள்களின் ஓட்டம் மற்றும் காந்தப்புலங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதும் இந்த பணியின் முக்கிய நோக்கமாகும்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியுள்ள முதல் சூரிய ஆய்வு விண்கலம் திட்டத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 3 வெற்றிக்குப் பிறகு இந்தியா மீது உலக நாடுகளின் கவனம் குவிந்துள்ள நிலையில், ஆதித்யா எல் 1 பயணமும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது.
மேலும் காண்க:
பான் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பு- இப்பவும் மிஸ் பண்ணாதீங்க