இன்று (9.10.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கும், என மொத்தம் 125 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை உழவர் நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் TNPSC மூலமாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இதுத் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் பின்வருமாறு-
வேளாண் துறையில் வழங்கப்பட்ட பணி நியமனம் விவரம்:
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இந்நாள்வரை வோண்மை உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1714 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 223 நபர்களுக்கும், என மொத்தம் 1937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கும் முதலமைச்சர் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி.அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்பாண்டியன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!
கோமியத்தினை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன?