கோவை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் காணப்படுவது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என்றும், பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என்று தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்ரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் முகாமிட்டு பயிர்களை சர்வநாசம் செய்து வருகின்றன. அவை, தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களை விரைவில் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
சாதாரண வெட்டுக்கிளிகள் (Grasshopper)
இதனிடையே, தமிழகத்தின் கோவை, நீலகிரி கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைத் தாக்கி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், வேளாண்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இவை, சாதாரண உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என ஆய்வுகளை மேற்கொண்ட தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புகள் இல்லை
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி (Gagandeep Singh Bedi) ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் 250 உள்ளூர் இன வெட்டுக்கிளிகள் இருப்பதாகவும், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்பட்டது உள்ளூர் வெட்டுக்கிளிகளே (Grasshopper) என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது வடமாநிலங்களில் உள்ள வெட்டுக்கிளிகள் கொடூர பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust) என்றும், அதன் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் ஆனால் தமிழகத்தில் வர வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார்.
தீர்வுகள் தயார்
மேலும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருவதாகவும், பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust) தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி அரசு தெரிவித்துள்ளதையடுத்து, அவைகளை கட்டுப்படுத்த மூன்று வகையான தீர்வுகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். .
மாலத்தியான் (Malathion), குளோர்பைரிபாஸ் (Chlorpyrifos) போன்ற மருந்துகளை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தலாம் என்றும், அரசு அறிவித்த பிறகே வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த உரிய முறையில் மருந்துகள் பயன்படுத்த வேண்டும் என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்...
தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதலா...? கிருஷ்ணகிரி, கோவையில் பரபரப்பு தேடுதல் வேட்டை!
வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்குமா? வேளாண் துறை விளக்கம்!!
வெட்டுக்கிளி வருகிறதா..? கர்நாடகாவில் உஷார் நிலை - அச்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள்?