சென்னையில் இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில், 8 நாட்கள் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது வரலாற்று தரவுகளின்படி சென்னை நகரத்தின் மிகவும் வெப்பமான ஜூன் மாதத்தில் ஒன்றாகும்.
நுங்கம்பாக்கம் வானிலை நிலையத்தில் இந்த மாதம் ஐந்து நாட்களில் 41 டிகிரிக்கு மேல் வெப்பநிலையும், இரண்டு முறை 42 டிகிரிக்கு மேல் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில், நகரில் 42.1 மற்றும் 42.3 டிகிரி வெப்பநிலை பதிவானது. 11 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும், மேலும் இயல்பை விட நான்கு டிகிரி அதிகமாக வெப்பநிலை பதிவானது. இதன் காரணத்தினால் பள்ளிகள் திறப்பை மாநில அரசு ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேதர்மேன் என சமூக வலைத்தளங்களில் அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், தரவுகளின்படி இன்னும் 3-4 நாட்களுக்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான நிலையை நீடிக்கும் என்பதால், இந்த ஜூன் மாதம் மிகவும் வெப்பமான மாதங்களில் ஒன்றாக முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் 14 நாட்கள் வெப்பநிலையானது 40 டிகிரியைத் தாண்டியது. அதேபோல், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 10 நாட்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டு 9 நாட்கள் 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகின.
தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியதே இத்தகைய வெயில் காலநிலைக்குக் காரணம். “பொதுவாக தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய காலகட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், குறைந்த காற்றழுத்தம்/மேல் காற்று சுழற்சி பர்மாவிற்கு அருகே கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு நீடித்ததும் இந்த வெப்ப சலனத்திற்கு காரணம் என ஜான் தெரிவித்தார்.
பொதுவாக நண்பகல் 12 மணியளவில் கடல் காற்று நகருக்குள் நுழையும், ஆனால் இந்த ஜூன் மாதத்தில், நகரின் மேற்குப் பகுதியில் மதியம் 2-3 மற்றும் 3-4 மணிக்குக்கூட கடல் காற்று நகருக்குள் நுழைந்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு 40 டிகிரி வரை வெப்பம் தொடரும் என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பி.செந்தாமரை கண்ணன் தெரிவித்தார். வெப்பநிலை எச்சரிக்கை ஜூன் 11 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை மெதுவாக தமிழகத்தில் வருவதால், தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நகரில் ஆங்காங்கே மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Credits – Deccan Chronicle
மேலும் காண்க:
10 கிலோ LPG சிலிண்டருக்கு வந்த திடீர் மவுசு- அப்படி என்ன ஸ்பெஷல்?