தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடும், வழக்கத்திற்கு குறைவில்லாத மகிழ்ச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல் பண்டிகை. இறுதி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அசைவ உணவுகளை மக்கள் சமைத்து உண்ணுகின்றனர். எனவே, இதை கறிநாள் என்றும் அழைக்கின்றனர். இதனால் இறைச்சி கடைகளில் இன்று கூட்டம் அலைமோதுகிறது. இன்றைய இறைச்சி தேவையை பூர்த்தி செய்ய வட மாநிலங்களில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் என்பது கனி காணும் பொங்கல் என்று இருந்தது. இந்த நாளில் மா, பலா மற்றும் வாழை என்ற முக்கனிகளை காண்பதால் வாழ்வு வளம் பெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவி வந்தது. அதனால் இன்றைய தினம் சுற்றத்தாருடனும், உறவினர்களுடனும் சேர்ந்து வெளியில் சென்று கனிகளைக் கண்டு மகிழ்ந்து வந்தனர். ஆனால், மாறிவிட்ட கால சூழலில் இன்று காணும் பொங்கல் பொது இடங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் சென்று பொழுதை கழிக்கும் நாளாக மாறிப்போயிருக்கிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. வண்டலூர் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா, கடற்கரை, மகாபலிபுரம் போன்ற இடங்களில் இன்று மிக அதிக அளவிலான மக்கள் கூடுகின்றனர். ஆனால், இன்றும் கிராமப்புறங்களில் கால்நடைகளை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் இருக்கின்றன.
ஏறு தழுவுதல் என்று பழம் பெயரோடும் பாரம்பரிய சிறப்புகளோடும் இன்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு பல தடைகளை தாண்டி சட்டபூர்வமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்ட போது தான் உலகம் திரும்பிப் பார்த்த இளைஞர்களின் எழுச்சி போராட்டம் நடைபெற்றது என்பதும் வரலாற்றுப் பதிவுகளில் காண கிடைக்கிறது. மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் வாய்ந்தது. சீறிவரும் காளைகளையும் அதை அடக்க மல்லுகட்டும் மாடுபிடி வீரர்களையும் காண உலகின் பல பகுதகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர்.
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மட்டும் 600-700 காளைகள் மீதம் பங்கு பெறுகின்றன. இவற்றை அடக்கும் வீரர்களுக்கு பல பரிசுகள் வழஙகப்படுகின்றன. இன்றைய நாளில் ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் ரேக்ளா பந்தயங்களும் நடைபெறுகின்றன. ரேக்ளா பந்தயங்களில் எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் சீறிப்பாயும். கரூர் அருகே நடத்தப்பட்டு வருகிற உலகப்புகழ்பெற்ற சேவல்கட்டு, பல கிராமங்களில் நடத்தப்படுகிற மஞ்சுவிரட்டு, எருது ஓட்டம் போன்றவை இந்நாளில் கால்நடைகளை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் உள்ளன என்பதற்கான நிகழ்கால சான்றுகளாகும்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07