
மக்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மனம் மாறி, இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் 71 வயது விவசாயி.
அதிகப்படியான ரசாயன பயன்பாடு, மண் வளத்தை இழக்க செய்கிறது. கால்நடைகளை வீட்டில் வளர்க்கவில்லை என்றால் அடுத்த தலைமுறையினருக்கு விவசாயம் செய்ய நிலம் இருக்காது; விதைக்கப்படும் விதைகள் வளராது. இதை உணர்ந்த பல விவசாயிகள், லாபம் குறைவாக இருந்தாலும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர்.
இதுபோன்று, பெலகாவி மாவட்டம், மாவினகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பகடி, 71, தான் இயற்கை விவசாயத்துக்கு மாறிய காரணம் பற்றி கூறியதாவது: எனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் இரண்டு ஏக்கரில் கரும்பும்; மற்ற இரு ஏக்கர்களில் நெல், வேர்க்கடலை பயிரிட்டேன்.
7 ஆண்டுகள்
ஆரம்பத்தில் நான் ரசாயனத்தை பயன்படுத்தி தான், விவசாயம் செய்தேன். நல்ல மகசூலும் கிடைத்தது. தெரிந்தே நாம் மக்களுக்கு விஷம் கொடுக்கக் கூடாது என்பதை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, உணர்ந்தேன். அன்று முதல் நிலத்திற்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தவில்லை. இதை அறிந்த பலரும் தற்போது என்னிடம் விளை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு ஏக்கரிலும் 30 டன்களுக்கு மேல் கரும்பு விளைகிறது. எங்களுக்கு சொந்தமாக கரும்பு ஆலை உள்ளது. வெல்லம் தயாரித்து அதையும் விற்கிறோம்.
தற்போது ஒரு குவிண்டால் ஆர்கானிக் வெல்லத்தின் விலை 7,000 ரூபாய். இதன் தேவை அதிகரித்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். கரும்பு சாகுபடி மூலம் ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். வெல்லம் செய்ய, சிலர் ரசாயனத்தை பயன்படுத்தி வளர்த்த கரும்புகளை, எங்கள் வீட்டுக்கு கொண்டு வருவோரை திருப்பி அனுப்பிவிடுகிறேன்.
கூட்டுக்குடும்பம்
வயலில் கட்டப்பட்டு உள்ள வீட்டில், எனது மகன்கள் பரசுராம், ஜிதேந்திரா என கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். அனைவரும் சேர்ந்தே விவசாயம் செய்கிறோம்.நிலங்களுக்கு நீர் பாய்ச்ச, இரண்டு கிணறுகள் தோண்டி உள்ளோம். இம்முறை சொட்டுநீர் பாசன முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.
இயற்கை முறையில் வேளாண்மை செய்த சாதனையை பாராட்டி, மாவட்ட வேளாண்மை துறை, சிறந்த இயற்கை விவசாயி' விருது வழங்கினர். அத்துடன், என் வீட்டில் 10 பசுக்கள், கன்றுகள் உள்ளன. அவற்றின் சாணத்தை உரமாக பயன்படுத்துகிறேன். பயிர்கள், நோயினால் பாதிக்கப்பட்டால், வீட்டில் தயாரிக்கப்பட்ட புளிப்பு மோர், வேப்ப எண்ணெய், கோமியம் ஆகியவற்றை அதன் மீது தெளித்தால் சரியாகிவிடும். வீட்டில் பயன்படுத்திய பால் மீதமானால் பால் பண்ணைக்கு கொடுத்துவிடுவோம். இதனால் பால் பண்ணையில் இருந்தும் ஒரளவு வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Read more:
வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயம்- அசத்தும் நத்தம் விவசாயி