தமிழகத்திற்கு உபரி நீரை (Surplus Water) மட்டுமே தந்து, கர்நாடகா ஏமாற்றியுள்ளது என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (Cauvery Water Committee) கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் (Naveen Kumar) தலைமையில், டில்லியில் (Delhi) நேற்று கூடியது. ஆண்டுதோறும் தமிழ்நாடு - கர்நாடகா இடையில், தண்ணீர்ப் பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. தீர்வில்லாமல் நிகழும் இப்பிரச்சினையில், இந்த ஆண்டும் மீண்டும் ஒரு பிரச்சினை ஆரம்பித்து விட்டது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய தண்ணீர் அளவை, கர்நாடகா இந்த ஆண்டும் இழுபறியில் வைத்துள்ளது.
காணொலியில் விவாதம்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், காணொலி (Video) வாயிலாக, தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட, நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகம் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
தமிழகம் கூறியது
நடப்பு ஆண்டுக்கான தண்ணீர் ஒதுக்கீட்டில், கர்நாடக அரசு, தமிழகத்துக்கு 14 டி.எம்.சி.,க்கு (TMC) மேல் நிலுவையில் வைத்துள்ளது. இதை விரைந்து வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடக அணைகள், மழையால் நிரம்பிய போது, அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் தான், தமிழகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. உபரி நீரைத் தந்து, கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது. முறையாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல், தமிழகத்தை வஞ்சிக்கிறது.
நிலுவையின்றி தண்ணீர் வழங்கல்
டெல்டா மாவட்டங்களில் (Delta Districts), சம்பா பருவ நெல் சாகுபடி (Paddy Cultivation) துவங்கி உள்ளதால், நீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே, இனிவரும் மாதங்களுக்கான ஒதுக்கீட்டு நீரை, நிலுவையின்றி உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக, கர்நாடக அணைகளுக்கு (Dams) எவ்வளவு நீர் கிடைத்தது, அதில் எவ்வளவு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது, குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நிலுவையில் உள்ள தண்ணீரை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே அதிக மழை தான்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்.