தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ அதிகனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2-வது அதிகப்பட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன் 1992 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள காக்காச்சி பகுதியில் 96.5 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
எதிர்பாராத விதமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையால் வாகைகுளம் - ஸ்ரீ வைகுண்டம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சிப்பட்டி, அணியாபரநல்லூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் கனமழை பெய்துவரும் நிலையில் மழைக்கால அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளார் கனிமொழி எம்.பி. உதவி தேவைப்படும் மக்களும், தன்னார்வலர்களும் இந்த எண்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு: 80778 80779.
தொடர் கனமழையால் கோவில்பட்டி மகாலட்சுமி நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில், இன்று ஆம்னி பேருந்து சேவை செயல்படாது என ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 மாதத்தில் மூன்றாவது முறையாக 136 அடியை எட்டியுள்ளது.
திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். கிட்டத்தட்ட தனித்தீவாக மாறியுள்ள திருச்செந்தூரில் மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் இந்த கலர்ல போனால் பிரச்சினையா?
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 43 நாட்களாக மூடப்பட்டிருந்த அருவியில் கடந்த 2 தினங்களாக குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அடுத்த 3 மணி நேரம் விருதுநகர் மற்றும் மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கையில் மிதமான மழை பெய்யும். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையிலும் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Read more:
கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு சான்ஸ் - ஆதார் இலவச அப்டேட் அறிவிப்பு
ரூ.15,000 மானியத்துடன் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்- அப்ளை பண்ணியாச்சா?