பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், கடந்த வாரம் ஒரு சிறப்பு ஆன்டனாவை, ரஷ்ய விண்வெளி வீரர்கள் பொருத்தியுள்ளனர்.
இந்த ஆன்டனா, பூமியிலுள்ள பறவைகள், விலங்குகளின் இடப்பெயர்ச்சி முதல் இனப் பெருக்கம் வரை கண்காணிக்க உதவும் என, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'ஐகாரஸ்' எனப்படும், விண்ணில் இருந்து விலங்குகளை ஆராய உதவும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், தற்போது அந்த ஆன்டனாவை பயன்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர்.
இதற்கென, அதி நவீன ஐகாரஸ், 'டிரான்ஸ்மிட்டர்' கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
முன், வலசைப் பறவைகளை கண்காணிக்க, ரேடியோ சமிக்ஞையை அனுப்பும் நுண்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஐகாரஸ் கருவிகள், எடை குறைவாக, சிறிதாக இருந்தாலும், அதில் காட்டுயிர்களின் இருப்பிடம் அறியும், ஜி.பி.எஸ்., வெப்பம், வேகம், ஈரப்பதத்தை பதிவு செய்யும் உணரிகளும், சமிக்ஞை அனுப்பும் சிறிய கம்பியும் உண்டு.
இந்த உணரிகள் சேகரிக்கும் தகவல்கள், விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்படும். ஆய்வு நிலையம், தினமும் பூமியை, நான்கு முறை வலம் வரும். எனவே ஆன்டனாவின் எல்லைக்குள் வரும் விலங்குகளின் உடலில் கட்டப்பட்டுள்ள கருவிகளில் இருந்து தகவல்களை பெற்று, மீண்டும் பூமியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தகவல்கள் திருப்பி அனுப்பப்படும். வரும், 2019க்குள், 1,000 விலங்குகள் மீது ஐகாரஸ் டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில், ஒரு லட்சம் விலங்குகள் மீது பொருத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அழியும் ஆபத்தில் இருப்பவை தவிர்த்து, மற்ற விலங்குகள், பறவைகள் பற்றி சேகரித்த தகவல்களை, 'மூவ் பேங்க்' என்ற தகவல் களஞ்சியத்தில் போட்டு வைத்து, அதை எவரும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதாக, ஐகாரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.