பெரம்பலூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சின்னவெங்காயத்தின் விற்பனைக்காக (ஏற்றுமதி) கேரள மாநிலத்தில் உள்ள கேரளா தோட்டக்கலை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்துடன் (Kerala State Horticulture Product Development Corporation) சார் ஆட்சியர் சு.கோகுல் இ.ஆ.ப, முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பிரதான மாவட்டமாக திகழக்கூடிய பெரம்பலூரில் 5,900 ஹெக்டேர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை, ராபி, ராபி (சிறப்பு பருவம்) என மூன்று பருவங்களில் ஆலத்தூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரங்களில் அதிக அளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள்:
அதிலும் ராபி பருவத்தில் அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு, அதிக மகசூல் பெறப்படுகிறது. அதிக விளைச்சலின் காரணமாக குறிப்பாக ராபி பருவத்தில் சந்தைக்கு அதிக அளவில் சின்ன வெங்காயம் வரத்து இருப்பதால், விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நிலை உள்ளது.
விவசாயிகள் மிகக் குறைந்த விலைக்கே (ரூ.10/கி) வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலைமாறி, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., தலைமையில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டம் 17.12.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியதன்படி, கேரள அரசின் HORTICORP நிறுவனத்தோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெங்காய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சின்ன வெங்காயம் விற்பனை மேற்கொள்வதற்காக சார் ஆட்சியர் அவர்களின் முன்னிலையில் பெரம்பலூர் சின்னவெங்காயம் மற்றும் மக்காச்சோளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஆலத்தூர் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கேரளா அரசின் HORTICORP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.பிரதீப் மற்றும் மண்டல மேலாளர் ஜே.சஜீவ் ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (31.12.2024) கையெழுத்தானது.
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் நல்ல விலைக்கு தங்கள் விளைப்பொருளை விற்பனை செய்யக்கூடிய சூழல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீர்மிகு நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வேளாண்மை துணை இயக்குநர்(வே.வ) எஸ்.எஸ்தர் பிரேமகுமாரி, வேளாண்மை அலுவலர் (வே.வ) மு.செண்பகம், வேளாண்மை அலுவலர் (உ.ச) நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் இனி வரும் காலங்களில் தங்கள் விளைப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.
Read more:
மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?