"கட்டடம் கட்ட குறைந்த பட்சம் இரண்டு மரங்கள் நட வேண்டும்" என்ற நகராட்சியின் அறிவுப்பு எல்லா தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது. இன்று பெரும்பாலானோர் பூமி வெப்பமயமாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். மாறி வரும் சுற்றுசூழல் நமக்கு அபாயம் விளைவிப்பதாக உள்ளது.
உலக அளவில் இன்று மரங்களின் முக்கியத்துவத்தையும், அதை நடுவதன் மூலம் வெப்பமயமாக்குதலை தடுக்க முடியும் என பிரசாரங்கள், விழிப்புணர்வு முகாம்கள், என பலவற்றை முன்னெடுத்து செய்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் மரம் நடுதலை அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் படி அக்குழந்தைகள் 10 மரங்கள் நட்டால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என கல்வி துறை சுற்றறிக்கையினை அனுப்பி உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள திருச்சூர், கொடுங்கலூர் நகராட்சி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். அதன் படி, புதிதாக வீடு கட்டுவோர் அல்லது புதிதாக வீடு வாங்குவோர் என யாராக இருந்தாலும் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் எனில் வீட்டைச் சுற்றிலும் குறைந்தது ஏதேனும் இரன்டு மரங்கள் வாழை, பலா என நட உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லையெனில் அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட மாட்டாது எனக் கூறியுள்ளது.
வீட்டின் சதுர அடி 1,500 அல்லது 8 செண்டுகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அங்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மரங்களை நட வேண்டும். அதன் பின்னரே அதிகாரிகள் கட்டட எண் வழங்குவார்கள் என்று கூறியுள்ளது.
”வீடு கட்டபபோவதற்கு முன்பு அதன் திட்டத்தில் மரம் வளர்ப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பின் அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு கட்டட எண் வழங்குவார்கள்” என நகராட்சித் தலைவர் ஜெய்த்ரன் கூறியுள்ளார்.
மரம் வாங்க இயலாதவர்களுக்கு நகராட்சியே இலவசமாக மர கன்றுகளையும், தேவையான உரமும் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக கொடுங்கலூர் தொகுதி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என நகராட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Anitha Jegadeesan
Krishi Jagran