News

Wednesday, 18 June 2025 06:03 PM , by: Harishanker R P

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மா விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருவவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து, மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல், வீரமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழாண்டில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. இனியும் மாமரங்களைப் பராமரித்து செலவு செய்து, வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என விவசாயிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய தங்கள் தோட்டங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சில விவசாயிகள் மா மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி இருந்த நிலையில், தற்போது 35 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கிய நிலையில், வரும் ஆண்டுகளில் மேலும் குறையும் நிலையுள்ளது.

ஆந்திராவில் மா விவசாயிகளைக் காக்க அம்மாநில அரசு மா கொள்முதல் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால், இங்கு மா விவசாயிகள் புறக்கணிக்கபடுகின்ரனர். மாங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூட செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் மா சாகுபடி பரப்பு வெகுவாக குறையும். எனவே, தமிழக அரசு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தொலைநோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)