சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நாளை 4 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023), இன்றும் (5.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை (06.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை, கல்யாணபுரம் பகுதி மக்களை சந்தித்து, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் சென்னை, கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
தாம்பரம் மாநகராட்சி, கூடுவாஞ்சேரி பகுதியிலுள்ள சூர்யாநகர் மற்றும் மகாலட்சுமி நகரில், தமிழ்நாடு அமைச்சர் தா.மோ. அன்பரசன், சக்கரபாணி ஆகியோர் இன்று நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். இந்த களப்பணியின்போது மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமய மூர்த்தி இ.ஆ.ப, உள்ளாட்சி பிரதிநிதிகள்,மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒரே நாளில் ரூ.1000 சரிந்தது தங்கத்தின் விலை- புயல் தான் காரணமா?
திருமங்கலம் பாடிகுப்பம் பிரதான சாலையில் அமைந்திருக்கும் Golden Jubilee அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வெள்ளம் சூழ்ந்திருப்பது குறித்து எவ்வித அச்சவுணர்வும் வேண்டாம் என குடியிருப்பு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதே பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் செயல்படும் சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இரயில் நகர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் துண்டிக்கப்பட்டிருக்கும் இரயில்வே குடியிருப்பு பகுதிகளையும், அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உவரி நீர் செல்லும் கால்வாயினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.
Read more: