காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் நாகை மாவட்ட விவசாயிகளை, குறுவை தொகுப்பு திட்டத்தில், தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தின் கீழ், 1 ஏக்கருக்கு யூரியா -45 கிலோ, டி.ஏ.பி.,- 50 கிலோ, பொட்டாஷ்- 25 கிலோ போன்ற இடுபொருட்கள், 100 சதவீத மானியத்தில் வழங்க, தமிழக அரசு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
குறுவைத் தொகுப்புத் திட்டம் (Kuruvai Synthesis Project )
குறுவைத் தொகுப்புத் திட்டத்தில், நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலை ஞாயிறு,வேதாரண்யம் ஒன்றியங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்திற்கு, 3,000 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ள, நாகை விவசாயிகள் மத்தியில் வேளாண் துறை அறிவிப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது: குறுவை தொகுப்பை பெற விவசாயி, கம்ப்யூட்டர் சிட்டா எடுத்து, வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ் பெற்று, வேளாண் விரிவாக்க அலுவலரிடம் சென்று பதிய வைக்க வேண்டும். ஒரு விவசாயி பல இடங்களுக்கும் அலைந்து ஒரு வழியாக பதிய வைத்தாலும், நடப்பாண்டு குறுவை தொகுப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து, 500 ஏக்கருக்கு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 3,000 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் கூறுகின்றனர். இது, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.
குறுவை தொகுப்பு தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். முப்போகம் சாகுபடி நடைபெறும் மயிலாடுதுறைக்கு, 55 ஆயிரம் ஏக்கர் அறிவித்துள்ளனர். ஆனால், காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள, நாகை மாவட்டத்தை வேளாண் அதிகாரிகள் உள்நோக்கததோடு புறக்கணிக்கின்றனர் என அவர் கூறினார்.
மேலும் படிக்க
ரூ.65 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!