தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக டீசலுக்கு பதில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் செயல்பாடு நேற்று துவங்கியது.
தமிழக அரசு சமீபத்தில் எத்தனால் கொள்கை, மின்வாகனக் கொள்கை ஆகியவற்றை வெளியிட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக டீசலுக்கு பதில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG- Compressed natural gas) மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., நேற்று (28.04.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் அன்றாக சேவைக்காக 376 அரசு பேருந்துகளும், 156 தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு காற்று மாசுபடுவதை குறைக்கும் நோக்கத்தில் டீசல், பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக இயற்கை எரிவாயுவினை பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக இரண்டு தனியார் பேருந்துகள் டீசலுக்கு பதில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்டது. இதன் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்கள். CNG எரிபொருள் டீசல் எரிபொருளை விட அதிக செயல்திறனும், மிக குறைந்த காற்று மாசுபாடும் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாகன கொள்கை 2023-ன் முக்கிய நோக்கமாக, மின்வாகன உற்பத்தியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எத்தனால் கொள்கையின் படி, எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாக குறையும் என்பதால் சுற்றுப்புற மாசுப்பாட்டின் நிலை பெருமளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய புகை உமிழ்வு இலக்கை அடைவோம் என்று இந்தியா அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தமிழ்நாட்டு முக்கிய பங்களிப்பு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன், தருமபுரி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் DNC மணிவண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளார் அ.க.தரணீதர், மாசு கட்டுப்பாட்டு அலுவலக உதவி பொறியாளர் லாவண்யா, இந்தியன் ஆயில் நிறுவன பிரதிநிதிகள், CNG வடிவமைப்பு பொறியாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
pic courtesy: dharmapuri collector fb page
மேலும் காண்க:
விவசாயிகளின் கவனத்திற்கு- கிரெய்ன்ஸ் இணையதளம் குறித்து A to Z தெரிஞ்சுக்கலாம் வாங்க..