நாளை (பிப்ரவரி 19) நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா மற்றும் வி.வி.பாட் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில், அரசியல் கட்சியினர் பிரத்யேக சின்னத்திலும், சுயேட்சைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க விருப்பமில்லாத வாக்காளர்கள் நோட்டா சின்னத்திற்கு வாக்களிப்பது இந்த உள்ளாட்சி தேர்தலில் கிடையாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் சீட்டையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டா இல்லை (No Nota)
உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளில் இதற்கு உரிய இடமில்லை என்பதையே காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். 'உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை 2006-ல் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதை மாநில அரசு தான் செய்ய வேண்டும். தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்னரே இதனை அரசு செய்ய முடியும்' என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விவிபேட், நோட்டாவை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய விதி - மாநில விதிகளின் பிரிவு 71 (இது லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் விதிகள், 1961 49-ஓ நடத்தை விதிகளுக்கு நிகரானது) உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த படிவத்தை கட்சி முகவர்கள் முன்னிலையில் நிரப்ப வேண்டும் என்பதால், அதைப் பயன்படுத்துபவர்களின் அடையாளம் வெளிப்பட்டுவிடும் என வாக்காளர்கள் அஞ்சும் நிலை இருப்பதால், நோட்டா விருப்பமும் சின்னங்களில் ஒன்றாக சேர்த்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்கள், இணையதளம் மூலம் வாக்குச்சாவடியை அறியலாம்!