
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஏப்.14 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 7ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, 8ம் தேதி காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் தாழ்வு பகுதியாக, வடக்கு-வடமேற்கு திசையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும். தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, நாளை வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு:
நாளை வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
இன்று (09-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Read more:
கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிப்பு
வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்