முதற்கட்ட அறுவடை பருவம் முடிவடைந்த நிலையில், விளைந்த பருத்தியின் விலை எதிர்ப்பார்த்த அளவிற்கு விலை போகாமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் மதுரை பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சராசரியாக கிலோ ரூ.73-க்கு விலை போன பருத்தி, தற்போது தேவை இல்லாததால் ரூ.50 ஆக குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. முதல் நிலை பருவ அறுவடை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும், இரண்டாம் நிலை அறுவடை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அறுவடை முடிந்த பருத்திகள் பின்னர் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள வெளிச்சந்தை மற்றும் ஒழுங்குமுறை வேளாண் விளைபொருட்கள் சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
வேளாண் வணிகத் துறையின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் பருத்தியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ. 53 முதல் ரூ. 60 வரை இருந்தது. 2021-ல் நூல் விலை அதிகரித்த போது, பருத்தியின் விலையும் கிலோவுக்கு ரூ.77 ஆக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், விலை சரிவதற்கு முன்பு ஒரு கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.113 வரை விலை உயர்ந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
"இந்த ஆண்டு, முதற்கட்ட அறுவடை முடிந்த நிலையில் ஒழுங்குமுறை சந்தையில் ஆரம்பக்காலத்தில் தரமான பருத்திக்கு சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.55 முதல் ரூ.60 ஆகவும், வெளிச்சந்தையில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 ஆகவும் விலை இருந்தது. சீசன் முடிவடையும் தருவாயில் கணிசமாக பருத்தியின் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.73 வரை விலை உயர்ந்து விவசாயிகளுக்கு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேசன் கூறுகையில், "டிசம்பர் முதல் மார்ச் வரை, 50 டன் பருத்தி கிலோவுக்கு 73.9 ரூபாய் என சராசரியாக, 36.9 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது.
கோடை சீசன் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒழுங்குமுறை சந்தையில் ஒரு நாளைக்கு சராசரியாக 200 முதல் 300 குவிண்டால் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை கிடைக்கிறது. விவசாயிகளுக்கு வெளிச் சந்தைக்குப் பதிலாக ஒழுங்குமுறைச் சந்தைகளின் நன்மைகள் குறித்துத் வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
சிவரக்கோட்டையை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தெரிவிக்கையில், ”தற்போதுள்ள சூழலில் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். சந்தையினை ஒழுங்குப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பருத்தியை கொள்முதல் செய்வதற்கு ஒழுங்குமுறை சந்தை அதிக வர்த்தகர்களை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
pic courtesy: unplash
மேலும் காண்க:
சூரிய சக்தியில் விவசாய பணிக்காக வாகனம்- 11 ஆம் வகுப்பு மாணவி சாதனை