மகளிர் உரிமை திட்டத்திற்கான பதிவில் முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பதிவினில் விடுபட்டவர்கள் 18.08.2023 முதல் 20.08.2023 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமை திட்டத்தில் பதிய விடுபட்டவர்கள், ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முன்னதாக விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் பயன் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியுள்ள மகளிர் ஆகியோர் இம்முகாமில் தற்போது பதிவு செய்துகொள்ளலாம்.
முதற்கட்டமாக மற்றும் இரண்டாம் கட்டமாக நடந்த முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள், குறிப்பிட்டிருந்த தேதிகளில் வருகைபுரியாமல் விடுபட்டோர் ஆகியோர் இம்முறை நடைபெறும் பதிவு முகாமில் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த முகாம் இம்முறை மூன்று நாட்கள் நடைபெறும்
முதற்கட்டமாக மற்றும் இரண்டாம் கட்டமாக நடந்த முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். மேற்படி சிறப்பு முகாம்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் எங்கெங்கு நடத்தப்பட்டனவோ, அவ்விடங்களிலேயே விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும், சிறப்பு முகாம் நடைபெறும் இடம், முகவரி குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை. விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
மேலும் தகவல்களுக்கு உங்கள் தொகுதிக்கு உட்பட்ட நியாய விலை கடைகளை அணுகவும்.
மேலும் படிக்க
TNUSRB காவலர் காலி பணியிடம்- நாளை முதல் தொடக்கம்.. மறந்துடாதீங்க
PM Vishwakarma Scheme: 18 பாரம்பரிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!