சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. செஸ் போட்டி விசித்திரமானது. மற்ற விளையாட்டு போல ஓடி ஆட வேண்டாம். மூளைக்கு வேலை கொடுத்தாலே, உட்கார்ந்த இடத்தில் இருந்து உலக சாம்பியனாகலாம். எதிர்த்து மோதுபவரின் மனநிலை அறிந்து கச்சிதமாக காய் நகர்த்த வேண்டும். காயை நகர்த்தி விட்டு, கையை எடுக்கும் தருணத்தில் 'ச்சே... தவறு செய்து விட்டோமே' என அலுத்துக் கொள்பவர்கள் அதிகம். மனவலிமையுடன் செயல்படுபவர்களுக்கே சாம்பியன் பட்டம் வசப்படும். இம்முறை இந்திய அணியினர் துல்லியமாக காய் நகர்த்தி கோப்பை வெல்ல வாழ்த்துவோம்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி (Chess Olympiad Tournament)
செஸ் ஒலிம்பியாட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கடந்த இரு முறை கொரோனா காரணமாக 'ஆன்-லைனில்' நடந்தது. 2020-ல் 163 அணிகள் களமிறங்கின. பைனலில் இந்தியா, ரஷ்யா மோதின. சாம்பியன் கோப்பையை இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன. இந்த ஆண்டு சென்னைக்கு அருகில் மாமல்லபுரம் 'போர் பாயின்ட்ஸ்' சொகுசு விடுதியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி (ஜூலை 28-ஆக.10) நடக்க உள்ளது. இதற்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தொடர்பு இல்லை. பொதுவாக செஸ் என்பது தனி நபர் விளையாடுவது. இதுவே, ஒலிம்பியாட்டில் அணியாக விளையாடுவர். ஓபன், பெண்கள் என இரு பிரிவாக நடக்கும். 187 நாடுகளில் இருந்து ஓபன் பிரிவில் 188, பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒரு அணியில் இரு குழுக்களும் சேர்த்து 10 பேர் இடம் பெற்று இருப்பர்.
பிரதமர் வருகை
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் கோலாகல விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாசிக்கல் சுவிஸ் லீக் (Classical Swiss League)
வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவர். குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை முடிக்க வேண்டும். வென்றால் 1 புள்ளி, 'டிரா'வுக்கு 0.5 புள்ளி தரப்படும். 'கிளாசிக்கல் சுவிஸ் லீக்' முறைப்படி போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். கண் அசராமல் காய் நகர்த்தும் நட்சத்திரங்களின் ஆட்டத்தை காண, தமிழகத்துடன் சேர்ந்து உலகமே காத்திருக்கிறது.
இந்தியா 'ஆறு'
ஒலிம்பியாட் தொடரை நடத்துவதன் அடிப்படையில் இந்தியா சார்பில் 3 ஆண்கள், 3 பெண்கள் அணிகள் என மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் அணி (Male Team)
- விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, நாராயணன், கிருஷ்ணன் சசிகிரண்.
- நிஹால் சரின், குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.
- கார்த்திகேயன் முரளி, சேதுராமன், சூர்யசேகர் கங்குலி, அபிஜீத் குப்தா, அபிமன்யு.
பெண்கள் அணி (Female Team)
- எட்டு மாத கர்ப்பிணியான ஹரிகா துரோணவள்ளி, ஹம்பி வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.
- வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ராத், திவ்யா தேஷ்முக்.
- ஈஷா, சாஹிதி வர்ஷினி, பிரதியூஷா, நந்திதா, விஷ்வா.
வாங்க...'தம்பி' வணக்கம்
செஸ் ஒலிம்பியாட் சின்னமாக குதிரைமுகம் கொண்ட 'தம்பி' உள்ளது. செஸ் போர்டில் உள்ள காய்களில் குதிரைக்கு மட்டும் தான் முகம் உள்ளது. இதனால் குதிரை தேர்வு செய்யப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து கை கூப்பி வரவேற்பது போல உள்ளது.
மேலும் படிக்க
கார்கில் போர் வெற்றி தினம்: வீரர்களுக்கு மரியாதை!
ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் நினைவு நாள்: கனவு காணுங்கள் இளைஞர்களே!