சிங்கம்புணரி பகுதியில் மாடுகளுக்கு படையல் போட்டு வழிபாடு நடத்தி விவசாயிகள் மாட்டுப்பொங்கலை கொண்டாடினர். விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் மாடுகளுக்கு தை மாதம் 2 ஆம் நாள் சிறப்பு வழிபாடு நடத்தி வணங்கினார்கள்.
பாரம்பரிய மாட்டுப் பொங்கல் (Traditional Cow Pongal)
விவசாயிகள் மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாரம்பரிய முறைப்படி மாடுகளுக்கும் குல தெய்வத்திற்கும் படையல் போட்டு வழிபாடு செய்வது வழக்கம். இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து மாடுகளுக்கு பட்டி அமைது அதில் மாடுகளை கட்டினர். அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்பாக பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்தனர்.
அனைத்து பானைகளில் இருந்தும் தலா இரண்டு கரண்டி பொங்கல் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு கூட்டுபடையல் போடப்பட்டது. தேங்காய், இளநீர், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களும் படையலில் வைக்கப்பட்டு மாடுகளுக்கும் குலதெய்வத்துக்கும் பூஜை செய்யப்பட்டது.
கிராம பெரியவர்கள் சாமியாடி அருள்வாக்கு கூறினர். பூஜை முடிந்ததும் படையல் பொருட்களை மாடுகளுக்கு ஊட்டிவிட்டு விவசாயிகளும் சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து மாடுகள் மஞ்சுவிரட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
மேலும் படிக்க