கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க, ஐந்து மருத்துவக்குழுக்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 100 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று நோயை கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 500 முன்கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவிர, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக, உளவியல் ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த மையத்தை, 0422 4585800 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கே சென்று சிகிச்சை (Go home and treat corona)
அவிநாசி ரோடு, கொடிசியா 'டி' அறையில், 350 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 300க்கும் அதிகமான படுக்கைகள் தயாராகி வருகின்றன. சுகாதார ஆய்வாளர்கள், 25 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க, ஐந்து மருத்துவக்குழுக்களை மாநகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளதாவது: கொரோனா உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க, ஐந்து மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஐந்து மண்டலங்களிலும் தலா ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் என ஐந்து மருத்துவ குழுவினர், 'பி.பி.இ., கிட்' உடை அணிந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
தேவையான மருத்துவ ஆலோசனைகள் அளித்து, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு கண்டறிந்து, தொடர் சிகிச்சை வழங்குகின்றனர்; மருந்து, மாத்திரைகள் தரப்படுகிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் வாயிலாக, இப்பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா? பொங்கலுக்கு பிறகு அறிவிப்பு!
எதுவும் செய்யாது ஒமைக்ரான்: பயம் வேண்டாம் என மருத்துவ நிபுணர் அறிவுரை!