குமரிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவான 'கியார்' புயலை தொடர்ந்து தற்போது குமரி கடல் பகுதியில் 'மஹா' புயல் உருவாகி உள்ளது. அதாவது குமரி கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகவுள்ளது. இதற்கு ‘மஹா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம், லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளுக்கு இடையில் மையம் கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள் மாவட்டங்களான விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடல் சிற்றம் காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் கடற்காற்றானது மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran