நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று (12.6.2023), மேட்டூர் அணையினை முதல்வர் திறந்து வைத்தார். இதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர், நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.
குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம்-2023:
* ஏக்கருக்கு 45 கிலோ யூரியா,
* 50 கிலோ டிஏபி,
* 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான இரசாயன உரங்கள் முழு மானியத்திலும்,
* 1.24 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவிகித மானியத்திலும்,
* மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடித் தொகுப்பும்,
* 6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகளும்,
* 747 பவர் டில்லர்களும்,
* 15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக, மொத்தம் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு காவிரி டெல்டா உழவர்கள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி, தேவையான அளவு இரசாயன உரங்களை உபயோகித்து, நெல் சாகுபடியினை மேற்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று ஜீன் மாதம் 12-ம் தேதி காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு ஜூன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து படிப்படியாக வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் வினாடிக்கு 18,000 கனஅடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல் மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து 108.50 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டி.எம்.சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
பள்ளிகள் திறப்பு- பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சரின் பதில்