தனியார் பால் நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக பால் விலையை உயர்த்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்து போன கொரோனா நோய் பெருந்தொற்று காரணமான ஊரடங்கு காலகட்டங்களில் வணிக ரீதியிலான பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதை காரணமாக வைத்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 20.00ரூபாய் வரை குறைத்தே அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் செய்தன.
அதே சமயம் 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பே இரண்டு முறை பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய அதே தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை கடுமையாக குறைத்த போதிலும் அந்த காலகட்டங்களில் விற்பனை விலையை சிறிதளவு கூட குறைக்க முன்வரவில்லை.
இந்த நிலையில் ஏற்கனவே நடப்பாண்டில் பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்கள் விற்பனை விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி இரண்டு முறை (ஜனவரி-பிப்ரவரி, ஏப்ரல்-மே) பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள் தற்போது மூன்றாவது முறையாக பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாயும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு 5.00ரூபாயும் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 84 சதவீதத்தை தனியார் பால் நிறுவனங்களே பூர்த்தி செய்து வருவதால் இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தேனீர், காபி உள்ளிட்ட பால் சார்ந்த உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எனவே தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்தி "பால் கொள்முதல் விலை, விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையம்" அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க:
தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்
திருமணம் ஆனவர்கள் ரூ.72,000 பென்சன் பெற முடியும், எப்படி தெரியுமா?