ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான பாலினைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தினால் நாளொன்றுக்கு சுமார் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.32, எருமை பாலினை ரூ.42 என்கிற அளவிலும் கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கு இணையாக லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அரசிற்கு கோரிக்கை வைத்தது. பால் கொள்முதல் விலையினை உயர்த்தவில்லை என்றால் வெள்ளிக்கிழமை (இன்று) முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினருடன் பால் வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பால் கொள்முதல் அளவினை அதிகரிக்க வேண்டும், கொள்முதலுக்கான ஊக்கத்தொகையினை தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் முன்வைத்தனர். ஆனால் அமைச்சருடன் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையனைடுத்து, இன்று முதல் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்காமல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான பாலினைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்று வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் குறிப்பிட்டவை பின்வருமாறு-
9,354 சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை. தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றுள்ளது. எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது என்றார்.
பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்கும் போது, அதற்கேற்ப பால் விலையினை அதிகரிக்க வேண்டிய நெருக்கடிக்கு தமிழக அரசு தள்ளப்படும். இதனால், பொதுமக்கள் பால் விலை உயருமா என்கிற அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்
இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!