குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை விரைவாக அமல்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதன்மையான வாக்குறுதியாக கருதப்பட்ட குடும்பத் தலைவிக்கான ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தினை நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. அதில் தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணமும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தினை விரைவாக அமல்படுத்த சிறப்பாக களப்பணியாற்றிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு-
”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன். இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், @TNeGA_Official பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்.
களப்பணியாளர்களை வழி நடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட சுமார் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிவித்துள்ளார்.
நேற்றைய தினமே தேர்வான அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 15-ஆம் தேதியன்று உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து , விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அதுத்தொடர்பாக விளக்கம் பெறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் மேல் முறையீடு செய்ய விரும்பினாலும் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு உரிய முறையில் விசாரித்து தீர்வு காணவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
விநாயகர் சதுர்த்தி- ஜெட் வேகத்தில் உயர்ந்தது தங்கத்தின் விலை