இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பரிவார்த்தணைகளை மேற்கொண்டால் விதிக்கப்படும் வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவு வரும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
நடப்பாண்டு ஒன்றிய அரசின் நிதி பட்ஜெட் 2023-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சுற்றுலாப் பேக்கேஜ்களுக்கான முன்பதிவுகள் உட்பட வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (TCS- Tax Collected at Source) விகிதம் ஜூலை 1, 2023 முதல் மொத்த பரிவர்த்தனை தொகையில் 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயரும் என ஒன்றிய நிதியமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு நீங்கள் கிரெடிட் கார்டில் ரூ.2.5 லட்சம் செலவிட்டால் 50,000 ரூபாய் வரி சேர்த்து ரூ.3 லட்சம் செலுத்த நேரிடும். வெளிநாட்டு டூர் பேக்கேஜ்கள் மட்டுமின்றி, சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான கிரெடிட் கார்டுகளுக்கும் 20 சதவீத டிசிஎஸ் விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமூக வலைத்தளங்களில் பலர் அரசின் முடிவை விமர்சித்து கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சட்டத்தில் திருத்தம்:
அந்நிய செலாவணி மேலாண்மை (நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள்) (திருத்தம்) விதிகள், 2023-ன் படி ஜூலை 1 முதல் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS- Liberalised Remittance Scheme) கீழ் இந்த வரி விகித உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் MakeMyTrip குழுமத்தின் CFO மோஹித் கப்ரா இதுக்குறித்து தெரிவிக்கையில், "வெளிநாட்டு பயண முன்பதிவுகள் உட்பட LRS பணம் அனுப்பும் TCS விகிதம் 2023 ஜூலை 1 முதல் 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக என நான்கு மடங்கு அதிகரிக்க உள்ளது. LRS பணம் அனுப்ப 5 சதவீத TCS முதன் முதலில் அக்டோபர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உள்நாட்டு பயண மற்றும் சுற்றுலா முகவர்களுக்கான (டிடிஏக்கள் - domestic travel and tour agents) வணிகத்தில் கணிசமான இழப்புக்கு வழிவகுத்துள்ளது.
ஏனெனில் வாடிக்கையாளர்கள் தற்போது டிசிஎஸ் இணக்கத்திலிருந்து தப்பித்து வரும் உலகளாவிய பயண முகவர்களுடன் (ஜிடிஏக்கள்- Global Travel Agents (GTA)) வெளிநாட்டு பயண சேவைகளை முன்பதிவு செய்ய விரும்புகிறார்கள். சூழல் இப்படியிருக்கும் நிலையில், முன்மொழியப்பட்ட நான்கு மடங்கு வரி விகித உயர்வு, டிடிஏக்களினை பயணிகள் தொடர்புக்கொள்ள தயங்குவார்கள். மேலும் இந்த வரி உயர்வு ஜிடிஏக்களுடன் முன்பதிவு செய்ய பயணிகளை தூண்டும் வகையில் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
கிரெடிட் கார்டு பயன்பாடுகளை வங்கிகள் முன்மொழிந்து வரும் நிலையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது, அங்கே தங்களது கிரெடிட் கார்டினை பயன்படுத்துவது அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையினை ஏற்படுத்தும் என நிதித் தொடர்பாக இயங்கும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
pic courtesy:hans india
மேலும் காண்க:
ஒன்றிய அரசின் நீர்வள பாதுகாப்பு விருது- தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல்