உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்பில், வீடு இடிந்து படுகாயமடைந்தவரின் உயிரை காப்பாற்ற மலைவாழ் மக்கள் கரடு முரடான மலைப்பகுதியில், 'டோலி' கட்டி துாக்கி வந்தனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உதவ வேண்டும். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியின மற்றும் இதர மக்களுக்கு, குடிநீர், வழித்தடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மலைப்பகுதியில் வழித்தடம் (mountain way)
குருமலை, மேல் குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைக்காக, அப்பர் ஆழியாறு வழியாக, 60 கி.மீ., துாரம் சுற்றி, ஏழு மணி நேரம் பயணம் செய்து, உடுமலை வர வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண, குழிப்பட்டியிலிருந்து, திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலைக்கு, மலைப்பகுதியில் வழித்தடம் அமைத்து கொடுக்க வேண்டும். இதனால், பயண நேரம் அரை மணி நேரமாக குறையும். அரசின், 2006 வனச்சட்டப்படி, அனுமதியிருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மண்வீடு இடிந்தது (Soil House)
நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால், குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பிலிருந்த, மண் வீடு இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்குள் இருந்த, பொன்னுச்சாமி, 50, படுகாயமடைந்தார்.
சுற்றிச்சென்றால், ஏழு மணி நேரம் ஆகும் என்பதால், குழிப்பட்டியிருந்து, பொன்னாலம்மன் சோலை வழியாக, மலைவாழ் மக்கள், மூங்கில் குச்சியில், போர்வையால் 'டோலி'கட்டி, காயமடைந்தவரை பலர் தூக்கி வந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பல கி.மீ., துாரம், கரடு, முரடான மலைப்பாதையில், வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு இடையே ஒவ்வொரு முறையும் பயணிப்பது வேதனையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டுகொள்ளாத அரசு (Unseen Government)
மலைவாழ் மக்கள் கூறியதாவது: மலைவாழ் மக்கள் குடியிருப்பில், அடிப்படை வசதிகள் இல்லை. குழிப்பட்டி, குருமலை மக்கள், திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலை வழியை பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த நிலையில், ரோடு அமைத்து தர வேண்டும், என பல ஆண்டுகளாக, வனத்துறை அதிகாரிகளிடமும், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிக்கு கூட வழியில்லாமல், 'டோலி' கட்டி, கரடு, முரடான பாதையில், துாக்கி வர வேண்டியுள்ளது.
எனவே, மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளை, புதுப்பித்து தரவும், ரோடு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், எங்கள் குடியிருப்பில், சுகாதாரத்துறை வாயிலாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
மேலும் படிக்க
குடியால் வரும் விளைவு: மூளையின் அளவு குறைய வாய்ப்பு!
இரவு நேரங்களில் ஓடும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!