கொரோனோ தொற்று பரவிவரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் 82 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO - world health organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழவதும் பரவி கோடிக்கனக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமுடக்கம், சமூக இடைவெளி போன்றவற்றுடன் மெல்ல மெல்ல இயல்பு வாழ்கை திரும்பி வருகிறது.
உருமாரிய கொரோனா வைரஸ்
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
எளிதில் பரவும் புதிய வைரஸ்
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
82 நாடுகளில் பரவிய புதிய வைரஸ்
இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இங்கிலாந்தில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன என்றார்.
தென்ஆப்பிரிக்கா நாட்டில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன என்றும், இதேபோல் பிரேசில் நாட்டிலிருந்து கண்டறியப்பட்ட மற்றொரு வகையான கொரோனா வைரஸ் பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன என்றும் கூறினார். மேலும் உலக நாடுகள் அனைவரும் இந்த கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க...
ராமநாதபுரத்தில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து அறிய செயல் விளக்க பண்ணை அமைப்பு!
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!