தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முட்டை வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினமும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த மாதம் முதல் நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்யும் முறையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) கொண்டு வந்தது. முட்டைகளின் விலையை அக்குழு நிர்ணயத்தாலும், பண்ணையாளர்கள் அவர்களுக்குக் கட்டுப்படியாகும் விலைக்கே விற்பனை செய்து வருகின்றனர். விலை நிர்ணயத்தினால் பண்ணையாளர்களுக்கு உற்பத்திச் செலவைக் காட்டிலும் கொள்முதல் விலை குறைவாகவே கிடைத்தது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் பண்ணையாளர்கள் சந்தித்து இது பற்றி விவாதித்தனர். இதில் பெருந்துறை, பல்லடம், நாமக்கல், பரமத்திவேலூர், புதன்சந்தை, ராசிபுரம், மோகனூர் ஆகிய 7 வட்டார தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
பண்ணையாளர்களின் சார்பில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.அவர்கள் கூறுகையில், முட்டை விலையை உயர்த்தியபோது, அதிக விலை கொடுத்து வாங்கிய வியாபாரிகள், விலை குறைந்த பின் நட்டத்தில் விற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் வியாபாரிகள் பழைய முறைப்படி வாரத்தில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விலை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதங்களில் உயர்ந்த தீவன விலை, முட்டை கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியால் பண்ணையாளர்கள் செய்வதறியாது உள்ளனர். இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மாதந்தோறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பண்ணையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran