அதிகமாக சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ள அமைச்சர் அங்கக வேளாண்மையினை மேம்படுத்த சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடப்பாண்டிற்கான வேளாண்மை பட்ஜெட்டில் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும். அங்கக வேளாண்மையை மேம்படுத்த சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 60,000 வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடிக்கு வேளாண் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம வேளாண் முன்னேற்ற குழு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு. பருவத்திற்கேற்ப பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்படும்.
விவசாயிகள் தகவல்களை பரிமாற வாட்ஸ் அப் குழுக்கள்- விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படும். ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கபடும்.
உயர் மதிப்பு வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாயும், பழங்குடியின சிறுகுறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துவரை மண்டலங்களுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் மற்றும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் அமைக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்த், நிலக்கடலை, உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத்திட்டம் மேற்கொள்ளப்படும். உடலுக்குத் தேவையான புரதச் சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க 30 கோடி ரூபாய் மதிப்பில் பயறு பெருக்குத் திட்டம்.
தென்னை உற்பத்தியில் முதலிடம் பெற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, தேனிவளர்ப்புக்கான ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்புகளை காண தொடர்ந்து கிரிஷி ஜாக்ரன் தமிழை காணுங்கள்.
மேலும் காண்க:
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு