பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. புள்ளிவிவரங்கள் படி, ஆண்டுதோறும் இந்தியாவில் 18 சதவீ பழங்கள் மற்றும் காய்கறிகள் ரூ 13,300 கோடி வீதம் வீணாகின்றன. உணவு உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் முறையான குளிர்பதன அல்லது குளிர் சேமிப்பு பெட்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததே பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் வீணாவதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றன.
நானோ தொழில்நுட்பம் விவசாயம் உட்பட அனைத்து துறைகளையும் தொட்டுள்ளது. மற்றும் நானோ தொழில் நுட்பத்தின் வெற்றி விஞ்ஞான சமூகத்தால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2009 ஆம் ஆண்டு நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கியது. பல்வேறு நானோ தயாரிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் பங்குதாரர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக கூட்டம் ஒன்று நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் சார்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி தலைமை பொது மேலாளர் திரு.என்.பி.மகோபத்ரா தொடக்கி வைத்தார். முனைவர் என்.குமார், துணைவேந்தர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொடக்க உரை ஆற்றினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி பேராசிரியர் முனைவர் கீ.செ. சுப்பிரமணியம் மற்றும் முனைவர் அ.லக்ஷ்மணன், பேராசிரியர் மற்றும் தலைவர் (நானோ தொழில்நுட்பத்துறை) ஆகியோர் நானோ பொருட்களை அறிமுகம் செய்த பின்னர் குழு விவாதம் நடைபெற்றது. இயற்கை வள மேலாண்மை இயக்குனராக இயக்குனர் முனைவர் ஆர்.சாந்தி வேளாண்மை மற்றும் ஊரக வளச்சிக்கான தேசிய வங்கி துணை பொது மேலாளர் திரு எம்.மகேஸ்வரராவ், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர், முனைவர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பல்கலைக்கழக அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கோயம்புத்தூர், தேனி, ஹைதராபாத், கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களை சேர்ந்த விவசாயிகள் விதை, உரம் பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் இடுபொருட்களை தயாரிக்கும் நிறுவனர்கள் உட்பட சுமார் 50 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் வாழ்திறனை அதிகரிக்க நானோ கரைசல் (புரூட்டி ப்ரஷ்) மற்றும் நானோ ஸ்டிக்கர் பயன்படுகிறது. வேளாண் இடுபொருட்களின் வெளிப்பாட்டை அதிகரிப்பதற்கு நானோ இழைகள், மகசூலை அதிகரிப்பதற்கு நானோ இழைகள் பொதிந்த விதைகள், செயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தாவரத்தினால் உருவாக்கப்பட்ட பயோ நானோ பிளாஸ்டிக் , ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஹைட்ரோஜெல், கைட்டோசான் நானோ கோளங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு நானோ சிலிக்கா போன்றவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண் வணிக இயக்குனரகத்தின் மூலமாக இரண்டு நானோ கரைசல்கள் வணிகப்படுத்தப்படுகின்றன. புரூட்டி ப்ரஷ் என்பது ஹெக்சனால் மூலக்கூறை உள்ளடக்கிய நானோ கரைசலாகும். இது காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக நாள் கெடாமல் பாதுகாக்கிறது. இந்த புரூட்டி ப்ரஷ்ஷை மாம்பழங்களில் தெளிப்பதன் மூலம் அதன் வாழ்திறனை இரண்டு வாரங்கள் அதிகரிக்க முடியும்.
பழங்களை இதன் கரைசலில் தேய்த்து எடுக்கும் போது இரண்டு வாரங்கள் பழங்களின் வாழ்திறன் அதிகரிக்கிறது. இந்த ஹெக்சனால் மூலக்கூறு நானோ இழைகளில் பொதியப்பட்டு நானோ ஒட்டு வடிவிலும் நானோ மாத்திரை வடிவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நானோ ஒட்டு மற்றும் நானோ மாத்திரைகளை பழங்கள் ஏற்றுமதிக்கு பயன்படும் பெட்டியில் இடும்போது பழங்களின் தரம் பாதுகாக்கப்படுகிறது.
கனடாவின் குயெல்ப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பில் ஹெக்ஸனல் அமைந்துள்ளது, மேலும் இது அமெரிக்க எஃப்.டி.ஏ வின் மூலம் பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நானோ இழைகள் மூலம் விதை நேர்த்தி செய்வது இறுதி கட்ட சோதனையில் உள்ளது. பூச்சிக்கொல்லி மூலக்கூறுகளை துளையுள்ள நானோ சிலிகாவில் இணைத்து பயன்படுத்துவதன் மூலம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடுதிறன் அதிகரிப்பதுடன் நிலையான வெளிப்பாடும் கிடைக்கிறது. கைட்டோசானை ஆதாரமாக கொண்ட பயோ பாலிமர் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் சத்துக்களையும் நிலையாக வெளியிடுவதற்கு உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஹைட்ரொபோனிக்ஸ், பசுமை வீடுகள் மற்றும் உள்புற சாகுபடியிலும் பயன்படுத்தலாம்.
நானோ அமைப்புகளின் மூலம் சீத்தாப்பழத்தில் உள்ள அசிட்டோஜெனின் மூலக்கூறு பொதியப்பட்டு புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்த முடியும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ துறையில் செயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வாழைத்தண்டு மற்றும் கற்றாழையில் நானோ படலம் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பாலிமர் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து வணிகப்படுத்த முடியும்.
K.Sakthipriya
Krishi Jagran