முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு இயற்கை விவசாய சுற்றுலா!
முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை (Garden) பார்வையிடுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு செய்த இயற்கை விவசாய சுற்றுலாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா (Isha) விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்னையில் பல பயிர் சாகுபடி (Cultivation) செய்து நன்கு லாபம் ஈட்டி வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுவதற்காக 2 நாள் இயற்கை விவசாய சுற்றுலா (Organic Farming Tour) ஒன்றை பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது.
இயற்கை விவசாய சுற்றுலா!
இயற்கை விவசாய சுற்றுலாவில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் (Pioneer farmers) தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தென்னை மரங்களுக்கு நடுவே ஐந்தடுக்கு சாகுபடி (5 Layer Cultivation) முறையில் தோட்டத்தை உருவாக்குவது, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் தேனி வளர்ப்புடன் ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றும் வழிமுறைகள், பண்ணை குட்டை மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டமைத்தல், நீர் மேலாண்மை, விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவசாயிகள் நேரடியாக பார்த்து தெரிந்துகொண்டனர்.
இயற்கை விவசாய பயிற்சி
பயணத்தின் போது அவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ஈஷா விவசாய இயக்க பயிற்சியாளர்கள் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் பதில் அளித்தனர். ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி (Organic Farming Training) அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!
பீட்ரூட் அறுவடைத் துவக்கம்! நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!