கோவை மாவட்டத்தில் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில், படிப்படியாக இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், வேளாண் பொருள் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
இயற்கை விவசாயம்
கோவை, சிங்காநல்லுாரில் திறந்தவெளி சிறை அமைந்துள்ளது. இங்கு நன்னடத்தை அடிப்படையில், தண்டனை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, விவசாய பணி மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு பணியாற்றும் கைதிகளின் தண்டனை காலம், சரிபாதியாக குறையும். விவசாய பணியில் ஈடுபடும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இங்குள்ள மொத்த, 30.72 ஏக்கர் பரப்பளவில், 10 ஏக்கரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. மீதமுள்ள, 20.72 ஏக்கரில் பீட் ரூட், கத்திரி, வெண்டை, கோஸ், முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய் உட்பட, 13 வகையான காய்கறி, பப்பாளி போன்ற பழ வகைகள் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
பயிற்சி
கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தாமரை கண்ணன் கூறியதாவது: கைதிகளின் தண்டனை காலத்தை உருப்படியாக செலவழித்து, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து, தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது, சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக அடையாளம் காட்டும் நோக்கில், திறந்தவெளி சிறை செயல்படுகிறது. 28 கைதிகள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு விவசாய பயிற்சிகளுடன், இயற்கை மண்வள பாதுகாப்பு, நீர் மேலாண்மை, இடுபொருள் சிக்கனம், ஆடு, மாடு வளர்த்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இயற்கை நுண்ணுயிர் உரம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள பரப்பளவில், படிப்படியாக இயற்கை வேளாண் விவசாய முறை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஜூன் வரை ஒன்றரை டன் காய்கறி உற்பத்தி செய்யப்பட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், 5.5 டன் காய்கறி உள்ளிட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு 'இருமடி' பாத்தி முறையில் அமைக்கப்பட்ட பந்தல் காய்கறிகள் கைகொடுத்துள்ளன. பப்பாளி, எலுமிச்சை விரைவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மூலிகை பூச்சி விரட்டி போன்ற இயற்கை முறையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சிறையில் தண்டனை கைதியாக இருந்து விவசாய தொழில் செய்த, 20க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது சுயதொழில் செய்து, சமுதாயத்தில் நல்ல நிலையை அடைந்துள்ளனர்.
Also Read | நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?
பெண் கைதிகளுக்கு அனுமதி?
திறந்தவெளி சிறைகளில் நன்னடத்தை அடிப்படையில், ஆண் கைதிகள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். இங்கு பணியாற்றும் கைதிகளின் தண்டனை பாதியாக குறையும் நிலையில், திறந்தவெளி சிறைகளில் பெண் கைதிகளை அடைக்க அனுமதியில்லை. இது தொடர்பான வழக்கில், பெண் கைதிகளையும் திறந்தவெளி சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், தற்போது வரை பெண் கைதிகளை அனுமதிப்பது குறித்து, சிறைத்துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இருமடி பாத்தி முறை தற்போது, 30 'சென்ட்' அளவுக்கு இருமடி பாத்தி முறையில், பந்தல் காய்கறி பயிரிடப்படுகிறது. இம்முறையில், 4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்துக்கு நிலத்திலுள்ள மேல் மண்ணை சுரண்டி, இருபுறமும் ஒதுக்கி வைத்து, தரையில் இருந்து முக்கால் அடி உயரத்துக்கு, 'இருமடி பாத்தி' அமைக்கப்படுகிறது. இம்முறையில் பயிரிடப்பட்ட பந்தல் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், 320 சதவீத அளவுக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க