கோவை தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் இணையதளம் வழியாக பதிவு செய்த விவசாயிகளுக்கே மானியம் வழங்கப்படும். இதற்காக பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி tnhorticulture.tn.gov.in/tnhortnet ஆகும்.
இதில் முறைப்படி பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். தாங்களாக பதிவு செய்ய தெரியாத மற்றும் இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தோட்டக்கலை மானிய விண்ணப்பத்தில் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண், விவசாயி பெயர், கைபேசி எண், மாவட்டம், வட்டம், கிராமம், வீட்டு முகவரி, அஞ்சல் குறியீடு ஆகிய விவரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM), தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (NADP), நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பரப்பு மேம்பாடு (RAD), ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (IHDS), தேசிய மூங்கில் இயக்கம் (NBM), தேசிய ஆயுஷ் இயக்கம் (NAM), தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) ஆகிய திட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் உரிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் திட்ட இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு (சாகுபடி பரப்பு) ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக விவசாயி புகைப்படத்தை பதிவேற்றம் செய்து Submit செய்ய வேண்டும். இந்த பதிவு தொடர்பான எஸ்.எம்.எஸ் மொபைல் எண்ணிற்கு வரும். அடுத்த சில வாரங்களில் மானியம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க