விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி - நவம்பர் 30:
தற்போது வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) தீவிரமாக உள்ளது. சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீடு (Crop insurance) செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதற்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் நேரடி ஆன்லைன் மையங்களில் கூட்டம் அதிகமாகி, விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கடும் அவதி:
அரசுடமை வங்கிகள், பயிர்க் காப்பீடு செய்வது கட்டாயம் கிடையாது என்பதைக் காரணம் காட்டி பயிர்க் காப்பீடு பிரீமியத்தை (Crop insurance premium), தாங்கள் கடன் வழங்கும் விவசாயிகளைக் கூட வெளியில் ஆன்லைன் சேவை மையங்களில் செலுத்தச் சொல்கிறார்கள். தங்களுக்கு வேலைப்பளு இருப்பதாகத் தட்டிக் கழிக்கின்றனர். கடன் வழங்கும் வங்கிகள் இதைப் போல செய்வதால், ஆன்லைன் மையங்களை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெறாத விவசாயிகள் அந்த வங்கிகளில் சம்பா, பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த முடியவில்லை. இப்படி எல்லா வங்கிகளும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிப்பதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
தற்காலிக ஆன்லைன் சேவை மையங்கள்:
ஐ.எப்.எஸ்.சி (IFSC) கோடு இல்லாத வங்கிகள் மூலம் பிரிமீயம் செலுத்த முடியாது என்ற விதி தளர்த்தப்பட வேண்டும். இது இயலவில்லை எனில் ஒவ்வொரு தொடக்கக் கூட்டுறவு வங்கியிலும், தற்காலிக ஆன்லைன் சேவை மையங்கள் செயல்பட இடமளித்து இதன் மூலம் செலுத்த வழி வகை செய்ய வேண்டும். உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகத்திலும், வேளாண்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தற்காலிக ஆன்லைன் சேவை மையங்களை (Online service centers) ஏற்படுத்தலாம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்ய இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் சம்பா பயிர்க் காப்பீடு செய்ய உதவுமாறு வேளாண்மைத் துறைச் செயலாளர், ஆணையர் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களை வேண்டுகிறோம் என ஆறுபாதி ப. கல்யாணம், விவசாயிகள் சார்பாககேட்டுக் கொண்டுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30! காஞ்சிபுரம் வேளாண் மையம் அறிவிப்பு!