விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை வேண்டியும், தமிழக அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால்ரோட்டில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின் போது, கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கேரளாவைப் போல முழு தேங்காய் கிலோ ரூ.50க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதேபோல, அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்னைக்கு பயிர் காப்பீடு (Crop Insurance for Coconut)
தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவையில் அமைத்திட வேண்டும்; தென்னை சார்ந்த உப தொழில் வளர்ச்சியை உருவாக்கிட வேண்டும்; உரம், பூச்சி மருந்து, இயந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்கிட வேண்டும்; தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடை மூலம் மானிய விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; நல்லாறு, ஆனைமலையாறு அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காயை சாலையில் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்று, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க
நெல்லை அரிசியாக மாற்றும் சிறிய இயந்திரம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!
தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு!