ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவரும், ஈ.சி.ஜி எனும் இயந்திரமும் தேவை. ஆனால், மாரடைப்பு ஏற்படும்போது இந்த இரு வசதியும் அருகில் இருப்பது கடினம். ஆனால், இப்போது தான் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறதே? அதை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்று கண்டறிய ஒரு செயலியை உருவாக்கியுள்ளது இன்டெர்மவுன்டெய்ன் ஹெல்த்கேர் என்ற நிறுவனம்.
அமெரிக்க இதய நலச் சங்கம் நடத்திய மாநாட்டில், இந்த செயலியின் துல்லியம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக மாற்றி, இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பும். உடனடியாக நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லாவிடில் நிம்மதியாக இருக்கலாம்.
இதய வலி உள்ள, 200 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் இருப்பதை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் இதய மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.