மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக அவலாஞ்சி பகுதியில் 38 செ.மீ, சின்னக்கல்லாறு பகுதியில் 12 செ.மீ, மேல் பவானி பகுதியில் 11 செ.மீ என ஏனைய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியது:
நேற்று (24.07.2023) மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (25.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது எனவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு-
25.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2023 முதல் 31.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்குமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை தொடர்பான மேலும் தகவல்களினை விரிவாக தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தினை காணவும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
PhonePe செயலியில் அட்டகாசமான அறிமுகம்- வரி செலுத்துபவர்களின் கவனத்திற்கு
மாநிலம் வாரியாக ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை?