சென்னை - கோவை பாலக்காடு ரயில் பாதையில், யானைகள் உயிரிழப்பை தடுக்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு அமைப்பை உருவாக்க இருப்பதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பான பி.எப்.சி.ஐ., சார்பில், 2020-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை - பாலக்காடு பாதையில் ரயிலில் அடிபட்டு, யானைகள் பலியாவதை தடுக்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. விசாரித்த தீர்ப்பாயம், யானைகள் குறுக்கிடுவதை முன்கூட்டியே கண்டறிந்து, ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ரயில்வே மற்றும் வனத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
புதிய திட்டம் ( New Project)
வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'கோவையில் இருந்து கேரளத்தை இணைக்கும் ரயில் தடம் அமைந்துள்ள பகுதிகளில், 470 ஏக்கர் பரப்பில் யானைகள் வாழ்கின்றன. யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதம், மனித உயிர் இழப்புகளுக்கு, 2015 - 2020 வரை, 5.15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 'யானைகள் பலியாவதை தடுக்க, கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிகாக நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் விரைவில் நிறுவப்படும்' என கூறப்பட்டுள்ளது. பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை - பாலக்காடு ரயில் பாதையில், யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து, முன்கூட்டியே இரயிலின் வேகத்தை குறைக்க, இரயில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் தடுப்பு அமைப்பை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, பிப்ரவரி 24-ல் விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிவது, எந்த அளவுக்கு சாத்தியமாகும்? 'அதை நடைமுறைப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தெற்கு ரயில்வே மற்றும் வனத் துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும் படிக்க
கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!