இந்தியாவில், 18 மாநிலங்களில் மரபணு மாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா முதல் அலை (Corona 1st Wave)
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பொருளாதாரம் முடங்கிய நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொரோனா முதல் அலை ஓரளவுக்கு ஓய்ந்தது.
இந்நிலையில், தற்போது உருமாறிய கொரோனா பல உலக நாடுகளில், தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா2-வது அலை தீவிரம் அடைந்துள்ளது.
மத்திய அரசின் அறிக்கை (Federal Government Report)
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட 10,787 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 771 மாதிரிகள் மரபணு மாறிய வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
புதிய வகை கொரோனா, 18 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், 771 மாதிரிகளில், 736, பிரிட்டனில் உருமாறிய கொரோனா வகையை சேர்ந்தவை. 34 பேரின் மாதிரிகள் தென் ஆப்ரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வகையை சேர்ந்தவை. ஒன்று மட்டும் பிரேசிலில் உருமாறிய கொரோனா வகையை சேர்ந்தவை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல் (Federal Government Instruction)
இதைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளேக் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் ன மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வேகமாகப் பரவிவரும் கொரோனாத் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தெரிவித்துள்ளது.
கடிதம் (Letter)
மேலும், ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளதால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, மக்கள் அதிகளவு கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் மூலம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
PM Kisan நிதி அடுத்த வாரம் விடுவிப்பு? மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்தால் ரூ.4000 கிடைக்கும்!!
சரியும் முள்ளங்கி விலை: ஒரு கிலோ ரூ.1க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை!!