புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்து, அதை ஈடுகட்டும் வகையில், கூடுதல் வார விடு முறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான விதிகளை வகுக்கவில்லை. இந்த புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labor Law)
புதிய தொழிலாளர் சட்டங்கள், நாட்டில் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது. புதிய சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து, 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது.
அதேபோல் ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும். இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையலாம்.
ஆனால் ஓய்வுக்குப்பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். இதுவரை 23 மாநிலங்கள் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளன. இன்னும் 7 மாநிலங்கள் மட்டும் விதிமுறைகளை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய விதிகள்படி, வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
மேலும் படிக்க
தூய்மைப் பணியாளர்களை காக்குமா தமிழக அரசு: விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!