தமிழக கடலோரப்பகுதிகளில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாலும், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை (18-10-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது 21-10-2023 வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 20-10-2023 வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் , தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
18.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.10.2023 முதல் 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் மற்றும் வானிலை தொடர்பான மேலும் தகவல்களுக்கு Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காண அறிவுறுத்தப்படுகிறது.
Read also:
தீபாவளி போனஸ் இவர்களுக்கு மட்டும் தான்- மத்திய அரசு அறிவிப்பு
நகைப் பிரியர்களின் கனவில் இடி- கண்மூடித்தனமாக ஏறியது தங்கத்தின் விலை