கோவிட் ஊரடங்கு காலத்தில் சாலையில் வசிக்கும் வீடற்றவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அப்பகுதியில் சென்று வரும் சாமானியர்களே உதவுவர். ஊரடங்கால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டதால், இவர்களும் ஒரு வேளை உணவுக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
புதிய திட்டம்
வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கும், 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' என்ற திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. திட்டத்தை கடந்த 29ம் தேதி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தால் சென்னையில் உள்ள 400க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களும் 1,800க்கும் மேற்பட்ட வீடற்றவர்களும் பயனடைவர்.
முதற்கட்டமாக இத்திட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்க ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தண்டையார் பேட்டை மருத்துவமனையில் உள்ள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் எட்டு பேர் மையத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மையத்தில் உள்ளவர்களுக்கு மனநல மதிப்பீடு மற்றும் கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
மீட்கப்பட்டவர்களில் 22 பேருக்கு மருத்துவ உதவி (Medical Help) தேவைப்படுகிறது. அவர்கள் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்படுவர். மீதமுள்ள 5 பேர் விடுதிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
மேலும் படிக்க