அரசு சார்பில் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யப்படுவதாக வரும் அழைப்பை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
அதுபோல, மத்திய, மாநில அரசுகள் சார்பில், அவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு எந்த முன்பதிவும் செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 - 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும், முதியவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி (Corona Vaccine)
முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் விவரங்களை மோசடியாளர்கள் பல்வேறு இணையதளங்கள் வாயிலாக பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. மோசடியாளர்கள் குறி முதியவர்கள் என்பதால், எளிதாக ஏமாறும் அபாயமும் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியவர்களை தொலைபேசி வாயிலாக அழைக்கும் மோசடியாளர்கள், தாங்கள் அரசு சார்பில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை செலுத்தியதற்கான தேதிகள் உள்பட சில தகவல்களை துல்லியமாக சொல்கிறார்கள். பிறகு, உங்களுக்கு வசதியான நாள்களில் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்வதாகவும், அதற்காக ஓடிபி வரும் அதனை தெரிவிக்குமாறும் கூறுகிறார்கள். இதனை நம்பி ஓடிபியை தெரிவித்தால் அவர்களது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது.
முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி
எனவே, அரசு சார்பில் இவ்வாறு தொலைபேசியில் அழைத்து முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யப்படுவதில்லை என்பதை முதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் cowin.gov.in இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம்.
மேலும், ஓடிபி வந்தால், அதனுடன் வரும் தகவலையும் அந்த ஓடிபி எதற்காக அனுப்பப்படுகிறது என்பதும் அதில் தெளிவாக இருக்கும். எனவே அதைப் படித்துப் பார்க்கவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க
3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!
டெல்டா மற்றும் ஒமைக்ரானை எதிர்க்கிறது உளாநாட்டுத் தயாரிப்பான கோவாக்சின்!